search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் கடை"

    • பார்கோடு ஸ்கேனர் வசதியும் கடைகளில் செயல்படுத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • 110 டாஸ்மாக் கடைகளுக்கு கையடக்க கருவி மூலம் பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபானங்களுக்கு பில் கிடைப்பது இன்னும் 2 வாரங்களில் சென்னை புறநகர் பகுதிகளில் நடைமுறைக்கு வருகிறது.

    டாஸ்மாக் மதுக்கடைகளில் எம்.ஆர்.பி. விலையை விட கூடுதலாக பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவது இன்னும் சில கடைகளில் தொடர்வதாக மதுவாங்குபவர்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இம்மாதிரி புகார்களை முழுமையாக நிவர்த்தி செய்வது மட்டுமின்றி கடைகளில் எவ்வளவு சரக்கு விற்பனையாகி உள்ளது, இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை கண்டறியவும் டாஸ்மாக் கடைகளை கணினி மூலம் ஒருங்கிணைக்க தனி 'சாப்ட்வேர்' உருவாக்கி டிஜிடடல் மயமாக்கப்பட்டு வருகிறது.

    இதன் அடிப்படையில் அரக்கோணம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 14 டாஸ்மாக் கடைகளில் பரீட்சார்த்த அடிப்படையில் கையடக்க கருவி மூலம் 'பில்' வழங்கி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அப்போது பல குறைபாடுகள் கண்டறியப்பட்டது. அதை தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் கண்டறிந்து மென்பொருளில் சரி செய்தனர்.

    இதைத் தொடர்ந்து அரக்கோணம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 110 டாஸ்மாக் கடைகளுக்கு கையடக்க கருவி மூலம் பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இன்னும் 2 வாரங்களில் சென்னை புறநகர் பகுதிகளில் இவற்றை செயல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் 4 ஆயிரத்து 829 கடைகளிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஒருங்கிணைப்பு கொண்டு வரப்பட்டு பில் வழங்கப்படுவதுடன் பார்கோடு ஸ்கேனர் வசதியும் கடைகளில் செயல்படுத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மனமகிழ் மன்றங்கள், தனியார் பார் உள்ளிட்டவை 3 நாட்கள் மூடப்படுகிறது.
    • உத்தரவுகளை மீறுவோரை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மருதுபாண்டியர்களின் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி, வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தி வரை 3 நாட்களுக்கு அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மனமகிழ் மன்றங்கள், தனியார் பார் உள்ளிட்டவை 3 நாட்கள் மூடப்படுகிறது.

    மேலும், உத்தரவுகளை மீறுவோரை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 4775 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
    • மதுவை மட்டுப்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டும்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாட்டில் தினமும் ரூ.2 லட்சத்திற்கும் கூடுதலாக மது வணிகம் நடைபெறும் 3500-க்கும் கூடுதலான டாஸ்மாக் மதுக்கடைகளில் இரண்டாவது விற்பனைக் கவுண்டரை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படவுள்ளதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மது விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன் டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக் கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 4775 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 3500-க்கும் கூடுதலான கடைகளில், அதாவது கிட்டத்தட்ட 75% கடைகளில் தினமும் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக மது விற்பனையாகிறது என்பதே தமிழகத்தின் சீரழிவுக்கு எடுத்துக்காட்டு தான். இவற்றில் பல கடைகளில் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று விற்பனைக் கவுண்டர்கள் இருந்தாலும் கூட மாலை நேரங்களிலும் தீப ஒளி போன்ற விழாக்காலங்களிலும் வாடிக்கையாளர் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை என்பதால் கூடுதலான இன்னுமொரு கவுண்டரை திறக்க டாஸ்மாக் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    மாநிலம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் கூடுதலான நியாயவிலைக் கடைகள் உள்ளன. வெளிச்சந்தையில் உணவுப் பொருட்களை வாங்க ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். அவர்களின் நிலைமை குறித்து எந்த கவலையும் கொள்ளாத தமிழக அரசு, மதுக்கடைகளில் ஒரு சில நிமிடங்கள் கூட வாடிக்கையாளர்கள் காத்திருக்கக் கூடாது என்று நினைத்து கூடுதல் கவுண்டர்களை திறக்கிறது என்றால் அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது. வருவாய் கொடுத்து வாழ வைக்கும் மது வாடிக்கையாளர்கள் நலனை அரசு எந்த அளவுக்கு பாதுகாக்கிறது என்பதற்கு இதுவே சான்று.

    மதுவை மட்டுப்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். மது வணிகத்தை ஊக்குவிக்கும் செயல்களில் அரசு ஈடுபடக்கூடாது. ஏற்கனவே அதிக அளவில் மது வணிகம் நடைபெறும் கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்களை திறப்பதென்பது மது வணிகம் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். எனவே, மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்களை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, படிப்படியாக மதுக்கடைகளை மூடி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • டாஸ்மாக் கடைகளில் கியூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வசதியை செயல்படுத்தவும் ஆலோசனை நடந்துள்ளது.
    • இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.600 கோடி அளவுக்கு அதிகபட்ச சரக்கு விற்பனை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் டாஸ்மாக் மதுக்கடைகளில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. ஆண்டுக்கு ஆண்டு விற்பனையும் அதிகரித்து வருகிறது.

    பஸ் நிலையம், ரெயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட மக்கள் நெருக்கம் அதிகம் கூடும் பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் எப்போதும் அதிகம் வருவதால் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக 2 கவுண்டர் திறக்கப்பட்டு மதுபாட்டிலை விற்பனை செய்து வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 4,829 மதுக்கடைகளில் கிட்டத்தட்ட 3,500 கடைகளில் தினசரி ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் சில கடைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கவுண்டர்கள் உள்ளன. கடையில் 2 பேர் மது பாட்டில்களை விற்பனை செய்கின்றனர். ஆனாலும் எல்லா கடைகளிலும் இவ்வாறு செய்ய முடியவில்லை.

    இடப்பற்றாக்குறை, வேலைக்கு ஆள் கிடைக்காத சூழல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு தினசரி ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் 3,500 மதுக்கடைகளிலும் கூடுதல் விற்பனை கவுண்டர்களை ஒரு வாரத்திற்குள் அமைக்க அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    தீபாவளி பண்டிகைக்காக விதவிதமான ரகங்களில் கூடுதல் சரக்குகள் டாஸ்மாக் கடைகளுக்கு வர உள்ளதால் அதை வைப்பதற்கு தேவையான இட வசதிகளை உருவாக்குமாறு விற்பனை மேலாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டு தீபாவளிக்கும் மதுக்கடைகளில் விற்பனை என்பது 3 மடங்கு அதிகமாக இருக்கும். கடந்த வருடம் தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை நடந்தது. அதிலும் மதுரை மண்டலத்தில் தான் ரூ.53 கோடிக்கு விற்பனை நடந்து புதிய உச்சத்தை தொட்டது.

    இதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.600 கோடி அளவுக்கு அதிகபட்ச சரக்கு விற்பனை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வருகிற 30, 31-ந்தேதி, நவம்பர் 1, 2, 3 ஆகிய 5 நாட்கள் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் களை கட்டும் என்பதால் கூடுதல் சரக்குகளை இருப்பு வைக்க இப்போதே முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    டாஸ்மாக் கடைகளில் கியூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வசதியை செயல்படுத்தவும் ஆலோசனை நடந்துள்ளது.

    இட வசதி உள்ள கடைகளில் தீபாவளி கூட்டத்தை சமாளித்து விடும் நிலையில் சிறிய கடைகளில் கூட்டத்தை சமாளிக்க கூடுதல் பணியாளர்களை உதவிக்கு வைத்துக் கொள்வது குறித்து கடை விற்பனையாளர்கள் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு வருகின்றனர்.

    • 14 மதுக்கடைகளிலும் அச்சிடப்பட்ட பில்கள் இன்று முதல் வழங்கப்பட்டன.
    • ஒவ்வொரு பாட்டிலுக்கும் தனித்தனி பில்கள் போடப்படும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் அதில் உள்ள அதிகபட்ச சில்லரை விலைக்கு (எம்.ஆர்.பி.) மேலாக விற்கப்படுகிறது. குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.50 வரை கூடுதலாக வசூலிக்கிறார்கள்.

    எல்லா கடையிலும் அதில் உள்ள விலைக்கு மதுபாட்டில்கள் விற்பது இல்லை. கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்கவும், தவறுகள் நடக்காமல் வெளிப்படை யாக விற்பனை செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    கியூ ஆர் குறியீடை ஸ்கேன் செய்து மின்னணு பண பரிவர்த்தனையின் வழியாக பணம் செலுத்தி மதுபானங்களுக்கான பில்லை பெறும் வசதியை செயல்படுத்த டாஸ்மாக் நிறுவனம் கடந்த சில மாதங்களாக முயற்சி மேற்கொண்டது.

    முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் இத்திட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட அரக்கோணம் உள்ளிட்ட 7 கடைகளிலும், ராமநாதபுரத்தில் 7 கடைகளிலும் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த 14 மதுக்கடைகளிலும் அச்சிடப்பட்ட பில்கள் இன்று முதல் வழங்கப்பட்டன. மேலும் மதுபானங்களில் கண்காணிப்பை உருவாக்க கலால் லேபில்களில் கியூ-ஆர் குறியீடுகளையும் அட்டைப் பெட்டிகளில் ஒரு பரிமாண பார்கோடுகளையும் சேர்த்துள்ளது.


    இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மது பாட்டிலில் அச்சிடப் பட்ட கியூ-ஆர் குறியீடு, விற்பனையாளர்களால் கை யடக்க கருவி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டவுடன் பில் அச்சிடப்பட்டு வெளிவரும். ஒவ்வொரு பாட்டிலுக்கும் தனித்தனி பில்கள் போடப்படும்.

    2 மாவட்டங்களில் இந்த புதிய முறையை அறிமுகப் படுத்தியுள்ளோம். இதன் மூலம் பெறப்படும் கருத்துக் களை பொறுத்து தேவைப் பட்டால் கணினியை மறு வடிவமைப்போம். ஓரிரு மாதங்களில் எல்லா டாஸ்மாக் கடைகளிலும் கணினி மயமாக்கப்டும்.

    தமிழகம் முழுவதும் 4,800 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து கடைகளையும் கணினி மயமாக்குவதன் மூலம் அதிகாரிகள் கண்கா ணிக்கவும், இருப்புகளை சரிபார்க்கவும் முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டணியில் மீண்டும் மாற்றம் வராது என்பது எங்களுடைய எண்ணம்.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டை அரசியலாக்க முயல்கின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று 5 புதிய பஸ் சேவைக்கான தொடக்க விழா நடைபெற்றது. தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு கொடியசைத்து வைத்து புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம். ஒரே நாளில் ஒரு உத்தரவு போட்டு நானும், முதலமைச்சரும் டாஸ்மாக் மதுக்கடையை மூடி விடலாம். மதுக்கடைகள் தொடர்ந்து செயல்படுவதில் முதலமைச்சருக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை.

    மதுக்கடைகள் என்றைக்காவது ஒருநாள் மூடப்பட வேண்டும் என்பதுதான் முதலமைச்சருடைய எண்ணம். ஆனால் உடனடியாக இதை செய்தால் என்ன நிலைமை வெளியில் ஏற்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

    எனவே அப்படிப்பட்ட ஒரு கடுமையான சூழ்நிலையை மிக நிதானமாக அணுகி கொண்டு போக வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாக, முதலமைச்சரின் நோக்கமாக இருக்கிறது. எனவே நிச்சயமாக ஒரு கால கட்டத்தில் மக்களை அதில் இருந்து கொண்டுவரும்போது மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கேள்வி:- விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டுக்கு முன்பு மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படுமா?

    பதில்:- இங்கு இருக்கின்ற நிலைமைகளை ஆலோசித்து, இங்கு இருக்கின்ற சூழ்நிலைகளை பார்த்து அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொருத்தவரை அவர்கள், அவர்களுடைய கொள்கை ரீதியான முடிவுக்காக ஒரு மாநாடு நடத்துகிறார்கள். அதில் எந்த தவறும் நாம் சொல்ல முடியாது. அவர்கள் அரசாங்கத்தை எதிர்த்து செய்கிறார்கள், முதலமைச்சரை எதிர்த்து செய்கிறார்கள் என்பது கிடையாது.

    அதை அவர்களின் கொள்கையாக மக்களுக்கு எடுத்து செல்கிறார்கள். மக்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது, இந்த உணர்வுகளை மக்களுக்கு வெளிப்படுத்தி அவர்களை அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்து கொண்டு வந்து விட்டால் அரசாங்கம் அதை செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

    கேள்வி:- விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்ததற்கு அ.தி.மு.க.வினர் சந்தோஷப்படுகிறார்கள். கூட்டணியில் மாற்றம் ஏற்படும், தங்கள் தலைமையில் மெகா கூட்டணி அமையும், பொறுத்திருந்து பாருங்கள் என்று பேச ஆரம்பித்து விட்டார்களே?

    பதில்:- கல்யாணத்துக்கு அழைப்பு கொடுக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று அர்த்தமா? எதிரிக்கு கூட கொடுக்கிறார்கள்.

    கேள்வி:- கூட்டணியில் மீண்டும் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறார்களே?

    பதில்:- கூட்டணியில் மீண்டும் மாற்றம் வராது என்பது எங்களுடைய எண்ணம். அது எங்களுக்கு தெரிகிறது. ஒரு அழைப்பு கொடுத்தவுடன் இவ்வளவு ஆட்டம் போடுகிறார்கள். அது ஏன் என்பது எங்களுக்கு தெரியவில்லை.

    கேள்வி:- ஆளும் கட்சி கூட்டணியில் இருந்து கொண்டு எதிர்க்கட்சிக்கு அழைப்பு கொடுத்தது எந்த விதத்தில் நியாயம் என்று நினைக்கிறீகள்?

    பதில்:- அதை தப்பு என்று சொல்ல முடியாது. ஒரு பொதுவான நிகழ்வுக்காக, ஒரு திட்டத்துக்காக அழைக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் வந்து கலந்து கொள்ளலாம் என்று அவர்கள் பொதுவாகத்தான் அழைத்திருக்கிறார்கள். அது தப்பு கிடையாதே? அப்படி ஒரு அழைப்பு கொடுப்பதில் நாம் எப்படி தவறு கண்டு பிடிக்க முடியும்.

    கேள்வி:- மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்துவது வெட்கக்கேடான விஷயம் என்று கூறி உள்ளாரே?

    பதில்:- மாநாட்டுக்கு அ.தி.மு.க.வினரைத்தானே கூப்பிட்டு இருக்கிறார். தமிழக அரசே மதுக்கடையை ஏற்று நடத்துகிறது என்று அ.தி.மு.க.வினரிடம் சொல்வதற்காக இருக்கலாம். இது எப்போது நடந்தது தெரியும் தானே?

    கேள்வி:- முதலமைச்சர் இல்லாத நேரத்தில் தான் இதுபோன்ற அழைப்பையெல்லாம் அ.தி.மு.க.வுக்கு கொடுக்கிறார்களே?

    பதில்:- அப்படி இல்லை. முதலமைச்சர் உலகத்தில் எங்கிருந்தாலும் தமிழ்நாட்டை தினம்தோறும் கவனித்துக்கொண்டு இருக்கிறார். அவர் கோப்புகளை அங்கிருந்தே பார்த்து கையெழுத்து போட்டு அதுபற்றியெல்லாம் சொன்னார். அதனால் தூரமாக இருக்கிறார் என்று நாம் நம்பிக்கொண்டு எதையும் செய்துகொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. திருமாவளவன் அவரது கட்சியின் கொள்கைக்காக தெளிவாக செய்கிறார். அதில் குற்றம் கண்டுபிடிப்பது தவறு. அதை அரசிய ஆக்குவதற்கு மற்றவர்கள் முயற்சி எடுக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

    கேள்வி:- வெளிநாட்டு மதுபான பார் அனுமதி தொடர்ந்து வழங்கப்படுகிறதே?

    பதில்:- வெளிநாட்டு மதுபான பார்களுக்கு நிறைய அனுமதி கொடுக்கவில்லை. எங்கெல்லாம் பிரச்சனைகள் இருக்கிறதோ அந்த இடத்தில் தான் கொடுக்கிறோம். வெளிநாட்டு மதுபான பார்களுக்கு நிறைய அனுமதி கொடுக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. டாஸ்மாக் கடையை அப்படியே வைத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்பதும் எங்கள் நோக்கம் அல்ல.

    டாஸ்மாக் கடைகளை மூடும்போது வேறு விதமான ஒரு இடத்துக்கு அவர்கள் போய் தவறாக பிரச்சனையாகி விடக்கூடாது என்பதை மனதில் வைத்து தான் அதற்கு அடிப்படையாக சில மாற்றங்களை செய்து அவர்களை ஒழுங்குபடுத்தி நம்முடைய இடத்துக்கு கொண்டு வந்து விட்டு அப்புறம் படிப்படியாக செய்ய வேண்டும். அந்த நோக்கத்தை நிச்சயமாக எல்லோரும் புரிந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது கொடுக்கக்கூடாது என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 3 நாட்கள் மாநகரில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • மது அருந்த வருபவர் உரிய வயது உடையவர் தான் என்பது குறித்தும் எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும்.

    கோவை:

    கோவை மாநகரில் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டி வருவோரால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

    இதனை தடுக்க போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டி வருவோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சொந்த வாகனங்களில் மது அருந்த வருவோர் திரும்பி செல்லவதற்கு வசதியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என மதுபான கூடங்களுக்கு கோவை மாநகர போலீசார் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 3 நாட்கள் மாநகரில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதில் 126 இருசக்கர வாகன ஓட்டிகள், 18 கார்களில் வந்தவர்கள் உள்பட 52 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 178 பேர் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மது அருந்திவிட்டு, வாகனம் ஓட்டுவதை தடுப்பு தொடர்பாக ஏற்கனவே கோவை மாநகரில் உள்ள அனைத்து வகை பார் உரிமையாளர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

    பார்களுக்கு சொந்தமாக வாகனம் ஓட்டி வருபவர்கள் திரும்ப செல்லும் போது மது அருந்தி இருந்தால் அவர்கள் வாகனத்தை இயக்காமல் இருக்க தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பார் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இருப்பினும் மதுக்கூட உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் தங்களது மது கூடத்திற்கு மது அருந்த வருவோர், கார் உள்ளிட்ட சொந்த வாகனத்தில் வந்தால் அவர் ஓட்டுநருடன் வர வேண்டும் என்பதை உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மது அருந்திய ஒருவர், ஓட்டுநர் இல்லாத சூழலில், அவர் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்ல ஓட்டுநருடன் கூடிய மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    அல்லது நம்பகத்தன்மை உள்ள வாகன ஓட்டுநர் ஒருவரை தொடர்புடைய பார் சார்பில் ஏற்பாடு செய்து மது அருந்தியவரின் சொந்த வாகனத்திலேயே அவரை வீட்டில் விடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மது அருந்த பார்களுக்கு வருபவர்கள், வேறு போதைப் பொருட்களை உபயோகிக்கின்றனரா? என்பது குறித்தும், மது அருந்த வருபவர் உரிய வயது உடையவர் தான் என்பது குறித்தும் எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும்.

    மது அருந்த வருபவர் நடவடிக்கை சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்.

    பார்களில் சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்த வேண்டும். மேற்கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய பார் நிர்வாகம் தவறி, அதன் மூலம் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் தொடர்புடைய மதுக்கூடத்தின் மீது சட்டப்படி நடவடிக்கையுடன் மதுக்கூட உரிமமும் ரத்து செய்யப்படும்.

    மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி முதல்முறை பிடிபட்டால் வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

    அதே தவறை 2-வது முறையாக செய்வோர் மீது ரூ.15 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனையாக விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது.

    இதில் தொடர்புடையவர்களின் வாகனம் முடக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆதனூர் பகுதியில் டாஸ்மாக்‌ மதுக்கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.
    • எந்த போராட்டத்திற்கு செல்கிறோம் என தெரியாமல் சென்றோம்.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பென்னாகரம் அருகே உள்ள ஆதனூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து ஆதனூர் பகுதியில் 'டாஸ்மாக்' மதுக்கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.

    பொதுவாக மதுக்கடை வேண்டாம், இருக்கும் மதுக்கடையை வேறு பகுதிக்கு மாற்றக்கோரியும் தான் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

    தற்போது மதுக்கடை வேண்டும் என பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த சம்பவம் வினோதத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் தர்மபுரியில் டாஸ்மாக் வேண்டும் என பெண்கள் போராடிய விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக போராட்டம் நடத்திய பெண்கள் கூறுகையில்,

    எந்த போராட்டத்திற்கு செல்கிறோம் என தெரியாமல் சென்றோம். தலைக்கு ரூ.300 கொடுத்து போராட்டத்திற்கு அழைத்து சென்றனர்.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற பின்னரே போராட்டம் குறித்து தெரிந்தது. போராட்டத்திற்கு அழைத்து சென்றவர்கள் கூறியதை பேட்டியில் கூறினோம் என்று தெரிவித்தனர்.

    • மதுபாட்டிலில் தூசி துகள்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • டாஸ்மாக் விற்பனையாளரிடம் கேட்டதற்கு சரிவர பதிலளிக்காமல் மது பாட்டில் சரக்கு நிறுவனத்திடம் கேட்க வேண்டும்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள பையூரில் டாஸ்மாக் உள்ளது.

    இந்த கடையில் வாலிபர் ஒருவர் மது வாங்கியுள்ளார். இதனை திறக்க முயன்ற போது மதுபாட்டிலில் தூசி துகள்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் கேட்டதற்கு சரிவர பதிலளிக்காமல் மது பாட்டில் சரக்கு நிறுவனத்திடம் கேட்க வேண்டும்.

    என்னால் ஓன்றும் செய்யமுடியாது என்று கூறி மாற்றி பாட்டிலை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

    இந்த வீடியோ மதுபிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத அரசாக தி.மு.க. அரசு செயல்படுகிறது.
    • டாஸ்மாக் கடைகளை குறைக்க அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.

    திருப்பூர்:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத அரசாக தி.மு.க. அரசு செயல்படுகிறது. காவல்துறையின் கைகள் பல நேரங்களில் கட்டப்பட்டுள்ளது என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும். தமிழக அரசு பல பெரிய குற்றங்கள் நடந்த பிறகு நடவடிக்கை எடுக்க நினைப்பது என்பது செயல் திறனற்ற அரசு என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

    கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் தொடர்கிறது. டாஸ்மாக் கடைகளை குறைக்க அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. வருமானத்தை பெருக்க, மக்கள் மேலும் குடிப்பதற்கு அரசு உடந்தையாக இருப்பது வேதனையானது.

    கள்ளச்சாராயம், போதைப்பொருட்களுக்கு மாணவர்களும், கிராமப்புறத்தை சேர்ந்தவர்களும் அடிமையாகி உயிர்பலி அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் இனியும் நடைபெறாமல் தடுக்கஆக்கப்பூர்வமான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் செயல்பாட்டை மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். சமீபத்தில் தேசிய கட்சியின் மாவட்ட மற்றும் மாநில தலைவர்கள் தமிழகத்தில் கொலையானது மக்களை பீதியடைய செய்துள்ளது.

    இந்த ஆண்டு, த.மா.கா. சார்பில் காமராஜர் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் வருகிற 14-ந் தேதி மாலை திருச்சி உழவர் சந்தை அருகே நடக்கிறது. தமிழக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குவாட்டரில் பாதி அளவான 90 மில்லியில் மதுபானங்கள் 80 ரூபாய்க்கு விற்பனை செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.
    • தெலுங்கானா மாநிலத்தில் 90 மில்லி டெட்ரா பேக்கில் தான் மக்களிடையே புழக்கத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கத்துடன் டாஸ்மாக் கடைகளில் 90 மி.லி. மது டெட்ரா பேக்கில் தீபாவளிக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

    டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டர் பாட்டில் ரூ.140-க்கு விற்கப்படுவதால் கூலி வேலை செய்பவர்களால் அதை வாங்கி குடிக்க முடியாமல் கள்ளச்சாராயம் வாங்கி குடிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் டாஸ்மாக் கடைகளில் குவாட்டரில் பாதி அளவான 90 மில்லியில் மதுபானங்கள் 80 ரூபாய்க்கு விற்பனை செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.

    இது சம்பந்தமாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் 90 மில்லி மது டெட்ரா பாக்கெட்டுகள் விற்பனை குறித்து அதிகாரிகள் கேட்டறிந்துள்ளனர்.


    தெலுங்கானா மாநிலத்தில் 90 மில்லி மது டெட்ரா பேக்கில் தான் மக்களிடையே புழக்கத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    டெட்ரா பாக்கெட்டுகளில் விற்கப்படும் சிறிய அளவிலான மது வகைகள் எந்த அளவுக்கு அங்கு புழக்கத்தில் உள்ளது என்பது பற்றியும் விவரம் சேகரித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 90 மி.லி. மதுபானங்களை தீபாவளி முதல் விற்பனைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    • மது குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றனர்.
    • பகல் நேரத்திலேயே பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவிகள் அந்தப் பகுதியில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

    சேலம்:

    சேலம் கோரிமேடு பொன்நகர் பகுதியை சேர்ந்த மக்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோரிமேட்டில் ஏற்கனவே 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புதிதாக அந்த கடைக்கு எதிரே டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே செயல்பட்டு வரும் 2 கடையினால் அந்த பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் மது குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றனர். பகல் நேரத்திலேயே பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவிகள் அந்தப் பகுதியில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

    ஏற்கனவே அந்த கடையை அகற்றச் சொல்லி வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது புதிதாக 3-வது கடை திறக்க முயற்சி செய்து வருகிறார்கள். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×